Responsive image Responsive image Responsive image Responsive image Responsive image Responsive image
annamalaiyar banner

எட்டாம்-திருமுறை-திருவாசகம்

நமச்சிவாய
திருச்சிற்றம்பலம்!!!

தொல்லை இரும்பிறவிச் சூழும் தளை நீக்கி அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே - எல்லை மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன் திருவாசகம் என்னும் தேன்.
(திருப்பெருந்துறையில் அருளியது தற்சிறப்புப் பாயிரம்)

நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க

வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க

ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி சீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி

ஆராத இன்பம் அருளுமலை போற்றி சிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனால் அவனரு ளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன்யான்

கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண்ணிறந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர் பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன்

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே

வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே

ஆக்கம் அளவிறுதி இல்லாய் அனைத்துலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின் நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே

கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை

மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப் புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய

விலங்கு மனத்தால் விமலா உனக்குக் கலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுருகும் நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்

தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனா ரமுதே சிவபுரனே பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப்

பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே

அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாஞ் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின்

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள் ஊற்றான உண்ணா ரமுதே உடையானே வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப ஆற்றேன்எம் ஐயா அரனேஓ என்றென்று

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்ஆனார் மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே

அல்லற் பிறவி அறுப்பானே ஓஎன்று சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து.

🙏 திருச்சிற்றம்பலம் 🙏

Responsive image Responsive image Responsive image Responsive image Responsive image Responsive image